Thursday, July 24, 2014

லார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின் ஏற்றம்

இக்கட்டுரை இட்லிவடையிலும் பதிப்பிக்கப்பட்டது
28 நீண்ட வருடங்களுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இவ்வெற்றி, மிகவும் பாராட்டுக்குரியது என்பது அனைவரும் சொல்லும் ஒன்று தான். மிக முக்கியமாக, ஒரு இளம் இந்திய அணியின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்பதை நினைவு கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி, சகீர் கான் என்ற ஜாம்பவான்கள் யாரும் இன்றி பெற்ற மகத்தான வெற்றி. 2011-ல் (இந்தியா மோசமாக தோற்ற) லார்ட்ஸ் போட்டியில் பங்கு பெற்ற அணியிலிருந்து தோனி, இஷாந்த் மட்டுமே இப்போது அணியில் உள்ளனர்.

ஏன் சொ.செ.சூ என்றால், இந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனக்குச் சாதகமான “பச்சை”க்களத்தை தயார் செய்தது, ஆண்டர்சனும், ப்ராடும் (Broad சற்று Fraud-ம் தான்), இந்தியாவை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்! டாஸிலும் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. எதிர்பார்த்தபடி இந்தியாவும் 145-7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹானே (103), புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் துணை கொண்டு, வழி நடத்தி, இந்திய ஸ்கோரை இரண்டு மடங்கு ஆக்கியதில், இந்தியா எடுத்த மொத்தம் 295. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்கள் அதிகம் எடுத்தும், இந்தியா 2-வது இன்னிங்ஸில் எடுத்த 342 ரன்களும், இஷாந்த்தின் அபார பந்து வீச்சும், இங்கிலாந்தின் எதிர்ப்பை முறியடித்தன.

களமும், ஸ்விங்கும் இருந்த விதத்தை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்திருந்தால், 150-ஐ தாண்டியிருக்காது என்று கூறுவேன். ரஹானேயின் முதல் இன்னிங்ஸ் சதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு தோதான ஒரு ஆடுகளத்தில், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 15-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2வது இன்னிங்க்ஸில் வெள்ளைக்காரர்கள் நமக்கெதிராக பொதுவாக பயன்படுத்தும் பவுன்சர் ஆயுதத்தை (தோனியின் பலத்த அறிவுரையின் பேரில்) இஷாந்த் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அசாதாரணம் என்பதோடு, மனவியல் ரீதியான ஒரு வெற்றியும் கூட!

இந்த லார்ட்ஸ் வெற்றிக்கு (தலைவர் தோனி தவிர்த்து) முக்கியக் காரணமாக குறிப்பிடவேண்டியவர்களாக, ரஹானே, முரளிவிஜய் (வித்தியாசமாக, இவர் பொறுமையின் உச்சமாக காட்சியளித்தது மன நிறைவைத் தந்தது), 2-வது இன்னிங்ஸில் 235/7 என்ற நிலையிலிருந்து இந்தியா 342 அடைய காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் வெறிபிடித்த வேங்கையாய் இங்கிலாந்தை வேட்டையாடிய இஷாந்த் ஆகியோர் இருந்தாலும், தனது ஆட்டத்தில் பரிமளித்தது மட்டுமன்றி (முதல் இன்னிங்ஸ் 6 விக்கெட்டுகள், 36 முக்கிய ரன்கள், 2-வது இன்னிங்க்ஸ் 52 மிக மிக முக்கிய ரன்கள்) “நம்மால் முடியும் அண்ணா” என்று சக வீரர்களுக்கு ஊக்கமும் அளித்த புவனேஷ்வர் குமார் தான் லார்ட்ஸின் கதாநாயகன் என்பது என் கருத்து.

1986-ஆம் ஆண்டு லார்ட்ஸ் வெற்றிக்கும் இந்த வெற்றிக்கும் சில சுவாரசியமான ஒற்றுமைகள் உள்ளன!

1. அப்போதும், இப்போதும் இந்தியாவின் கேப்டன்கள் உலகக்கோப்பையை ஏற்கனவே வென்றவர்கள் - கபில்தேவ், தோனி
2. அப்போதும், இப்போதும் தனது கடைசி இந்தியத்தொடரை வென்ற, ஓர் இடதுகை ஆட்டக்காரர் இங்கிலாந்தின் கேப்டன் - டேவிட் காவர், அலிஸ்டர் குக்
3. அப்போது ரோஜர் பின்னி, இந்த அணியில் அவர் மகன் ஸ்டூவர்ட் பின்னி
4. அப்போதும், இப்போதும் ஒரு துவக்க ஆட்டக்காரர், சென்னை மண்ணின் மைந்தன் - ஸ்ரீகாந்த், முரளிவிஜய்
5. அப்போதும், இப்போதும் ஒரு மும்பை வீரர் சதமடித்தார்! - வெங்க்சார்க்கர், ரஹானே
6. அப்போதும் ஷர்மா, இப்போதும் ஒரு ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் - சேத்தன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா :-)
7. அப்போது ரவி சாஸ்திரியும், இப்போது ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக
8. இறுதியாக, 1986 மற்றும் 2014 இந்த இரண்டு ஆண்டுகளும் repeating வகை, அதாவது, இவ்விரு ஆண்டுகளின் கேலண்டர்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

தலைமைச்சுமையால், மிகச்சிறந்த ஆட்டக்காரரான குக் சொதப்புவது பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆட்டக்காரராக அவரை இழப்பது இங்கிலாந்துக்கு பேரிழப்பாகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரை, இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் இருப்பதால், தோனி அணியில் ஒரு complacency வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து க்ரீன் டாப் களங்களையே தேர்வு செய்யும், அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இந்த 2 டெஸ்ட்களில் அத்தனை சிறப்பாக ஆடாத ஷிகர் தவானும், விராத் கோலியும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்ப்பது மிக அவசியம். அனைவரும் டெஸ்ட் தொடரை இந்தியா இன்னும் வென்றுவிடவில்லை என்பதை தெளிவாக நினைவில் இருத்துதல் அவசியமாகிறது.

---எ.அ.பாலா

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

வாசித்து கருத்து கூறவும்!

வவ்வால் said...

எ.அ.பாலா,

வலையுலகில் கிரிக்கெட் மோகம் குறைஞ்சுப்போச்சு போல யாரும் "லார்ட்ஸ் வெற்றி" பற்றி எழுதக்காணோமேனு நெனைச்சேன் , நானிருக்கேன் என ஆஜா ஆகிட்டிங்க, சிறப்பான அலசல்.

# முதல் இன்னிங்ஸ்சில் ரகானேவின் சிறப்பான ஆட்டமே "வெற்றியின் முதுகெலும்பு" அதனை சார்ந்தே பின்னர் அணியின் பந்து வீச்சாளர்களும் "எழுச்சியுடன்" செயல்ப்பட்டுள்ளார்கள், சொற்ப ரன்னில் சுருண்டிருந்தால் , உளவியல் ரீதியாக இனிமே என்னத்த ஆடி கிழிக்க என ஒட்டு மொத்த அணியுமே சோர்வடைந்திருக்கும்.

சுல்தான் ஆஃப் ஸ்விங் ன அறியப்பட்ட வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் இணை எந்த அணியையும் நிலை குலைய செய்யக்கூடியவர்கள், அவர்கள் ஆட்டத்திறனின் உச்சத்தில் இருக்கையில் கூட பாக்கிஸ்தான் அணி சொதப்ப காரணம் , as a team bowling and batting unit failed to omplement each other எனலாம்,

அதே கதை தான் மேற்கு இந்திய அணிகளூக்கும் வால்ஷ் & அம்புரோஸ் உச்சத்தில் இருந்தும் , லாரா எல்லாம் இருந்தும் , ஒரே அணியாக செயல்ப்படவில்லை,

தற்போதைய இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய(pvt.Ltd) அணியில் "அணியாக விளையாடக்கூடிய" இளைய வீரர்கள் இருப்பதால் , இவெற்றி சாத்தியமாகி இருக்கென நினைக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

வாங்க வவ்வால், நன்றி தங்கள் கருத்துகளுக்கு :-)

//முதல் இன்னிங்ஸ்சில் ரகானேவின் சிறப்பான ஆட்டமே "வெற்றியின் முதுகெலும்பு" அதனை சார்ந்தே பின்னர் அணியின் பந்து வீச்சாளர்களும் "எழுச்சியுடன்" செயல்ப்பட்டுள்ளார்கள், //

ரஹானேயின் சதம் அதி முக்கியத்துவம் மிக்கது என்று நானும் தெளிவாக சொல்லியிருக்கிறேன் :-)

//"அணியாக விளையாடக்கூடிய" இளைய வீரர்கள் இருப்பதால்//

இவ்வியல்பு இல்லாமல் வெளியில் ஜெயிப்பது என்பது ஆகாத காரியம் என்பது நாம் அறியாத விஷயமா என்ன!

Srriram said...

All Similarity with 1986 ended today.

said...

India thought Lord's win is enough... thats y they lost next all 3 matchs...
-Sam

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails